தமிழகத்தில் சட்டம் ஓழுங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சட்ட சபையில் முதலமைச்சர் உரை

Admin

சென்னை : கடந்த 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று சட்டபேரவையில் முதல்வர் ஜெயலலிதா புள்ளி விவரங்களோடும் ஆதாரத்தோடும் தெரிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கை விவாதங்களுக்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-

ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால், அந்த மாநிலத்தின் மக்கள்வளம் பெற வேண்டும். மக்கள் வளம் பெற வேண்டுமெனில் அந்த மாநிலத்தின்பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு பல்வேறுகாரணிகள் உள்ளன. மனித வளம் மேம்பாடு அடைந்தால், பொருளாதாரவளர்ச்சிக்கு அது வழிவகுக்கும். மாணாக்கர்களுக்கு சிறந்த கல்வி அளிப்பதும், மக்கள் உடல் நலன் பேண திட்டங்கள் வகுத்து செயல்படுத்துவதும், மனித வளமேம்பாட்டிற்கு தூண்டுகோலாக அமையும். இயற்கை வளங்கள் பொருளாதாரவளர்ச்சிக்கு ஒரு காரணியாக அமையும். சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம் ஆகியவை தொழில் வளர்ச்சிக்கு வழிவகுத்து அதன் மூலம் பொருளாதார வளர்ச்சியும் மக்கள் வாழ்வில் வளமும் ஏற்பட ஏதுவாகும்.

பொருளாதார வளர்ச்சிக்கென இது போன்று பல்வேறு காரணிகள்  இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது பொது   அமைதி,பாதுகாப்பு ஆகியவை தான். பொருளாதார வளர்ச்சிக்குத்  தேவையான அனைத்துகாரணிகளும் இருந்தாலும், அமைதியான  சூழ்நிலை நிலவவில்லை என்றால்,அங்கே எந்தவித வளர்ச்சியும்   ஏற்படாது. பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் போது, எந்தவித வளர்ச்சியும் இருக்காது. பொது அமைதி குன்றிய சூழ்நிலையில்தங்களைக்  காத்துக் கொள்வதிலேயே நேரத்தையும் ஆற்றலையும் மக்கள்  செலவிடவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் வளர்ச்சிக்கான எந்த   நடவடிக்கையிலும் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள இயலாது.

எனவே தான், பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும்,  சட்டம் – ஒழுங்கிற்கும் மிகுந்த முக்கியத்துவத்தை எனது அரசு அளித்து வருகிறது.  இங்கே சட்டமன்றத்திலும் சரி, வெளியேயும் சரி, தி.மு.கவினர்  சட்டம் – ஒழுங்குசீர்குலைந்து விட்டது என்றும், பொது அமைதி பாதிக்கப்பட்டு விட்டது என்றும் தொடர்ந்து உண்மைக்கு மாறாக தெரிவித்து  வருகின்றனர். பொது அமைதி, சீரானசட்டம்-ஒழுங்கு நிலைமை என்பதும், குற்ற நிகழ்வுகள் என்பதும் வெவ்வேறானவை. மூன்று போலீஸ் கமிஷன்களை தங்கள் ஆட்சி காலத்தில்  அமைத்ததாக பெருமைபட்டுக்கொள்ளும் தி.மு.க.வினர் அந்த கமிஷன்கள்  அளித்த அறிக்கைகளை சரியாக படித்துப் புரிந்து கொள்ளவில்லை என்று தான் நான் நினைக்கிறேன்.

2006-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மூன்றாவது காவல் ஆணையம்தனது  அறிக்கையில் சட்டம் – ஒழுங்கைப் பற்றி விவாதித்துள்ளது. அதில்,   உச்சநீதிமன்ற உத்தரவுகளை எடுத்துச் சொல்லி, சட்டத்தை மீறும்  ஒவ்வொரு செயலும் ஒழுங்கை பாதிக்கிறது. ஆனால், சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் செயல்கள்அனைத்தும் பொது அமைதியை பாதிக்கும் என கூற இயலாது. பொது அமைதியை பாதிக்கும் நடவடிக்கைகள் மாநிலத்தின் பாதுகாப்பை பாதிக்கும் என கருதமுடியாது என தெரிவித்துள்ளது. அதாவது, குற்ற நிகழ்வுகள் சட்டத்திற்குஎதிரானதாக, ஒழுங்கை பாதிக்கக் கூடியதாக திகழ்ந்தாலும், அவை பொது அமைதிக்கு பங்கமானது என்றோ, இந்த நிகழ்வுகளாலேயேசட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்றோ கருத இயலாது.

2006 முதல் 2011 வரையிலான அப்போதைய தி.மு.க. ஆட்சியில் குற்றநிகழ்வுகள் அதிக அளவில் இருந்ததோடு மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கு மற்றும்பொது அமைதி ஆகியவையும் சீர்குலைந்திருந்தன. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர், அப்போதைய உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்ற போது மதுரை ரயில் நிலையத்தில்அவரை தாக்கக் கூடிய சூழ்நிலை இருந்ததாக சொல்லப்படுவது போன்றநிகழ்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு நான்  இவ்வாறு தெரிவிக்கவில்லை.

13.6.2006 அன்று காலை அப்போதைய அமைச்சர்மு.க.ஸ்டாலின் மதுரை ரயில் நிலையத்தை சென்றடைந்து தொண்டர்களுடன் தனது காருக்குசென்று கொண்டிருந்த போது சுமார் 50 வயது மதிக்கத்தக்க கண்ணாடி அணிந்த நபர் ஸ்டாலினை நோக்கி கை குலுக்குவதற்காக கை நீட்டியுள்ளார் என்றும், அப்போது ஸ்டாலின் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய ரிசர்வ் காவல்படையைச் சேர்ந்த அவில்தார் சுரேஷ்குமார் இதை கவனித்து உடனடியாக அந்த நபரை பின்னோக்கி இழுத்துள்ளார் என்றும், அந்த அடையாளம் தெரியாத நபர் சிறிய கத்தி ஒன்றை தவற விட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார் என்றும், அவரை பின்னால் இழுத்த போது அவில்தார் சுரேஷ்குமாரின் கையில் சிறு காயம் ஏற்பட்டது என்றும், சுரேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் மதுரை ரயில்வே காவல்நிலையம் குற்ற எண்.145/2006 இ.த.ச.பிரிவு 307-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மாநில குற்றப்பிரிவு குற்றபுலனாய்வுத் துறைக்கு இந்த வழக்கு 17.6.2006 அன்று மாற்றப்பட்டு எதிரியை கண்டுபிடிக்கவே இயலவில்லை.ஒரு மாநில அமைச்சரை தாக்கும் நோக்கோடு ஒருவர் செல்ல முடியும் என்றால், அது ஒரு ஆழ்ந்த கவலை கொள்ளக் கூடிய ஒழுங்குப் பிரச்சனை என்றாலும், இதை வைத்து மட்டும் அப்போது சட்டம்-ஒழுங்கு  சீர்குலைந்திருந்தது என்று நான் சொல்லவில்லை. அப்போதைய தி.மு.க. ஆட்சியில் பல்வேறு அதிகார மையங்கள் இருந்தனஎன்பது அனைவருக்கும் தெரியும். காவல் துறையின் செயல்பாட்டில் பல்வேறுகுறுக்கீடுகள் இருந்தன. பொதுமக்கள் தங்களின் நிலங்கள், வீடுகள் ஆகியவற்றை பாதுகாத்து வைப்பதே கூட கடினம் என்ற நிலை ஏற்பட்டது. அன்றைய தி.மு.க ஆட்சியின் போது சட்ட விரோத கும்பல்கள் நிலம் மற்றும் சொத்துகளின்உரிமையாளர்களை மிரட்டியும் அவர்களை கடத்திச் சென்றும், அவர்களதுசொத்துகளை மிகக் குறைந்த விலைக்கு மிரட்டி வாங்குவதையும், போலியான ஆவணங்களை தயார் செய்து சொத்துகளை தங்கள் பேரில் பதிவு செய்வதையும்வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

எனவே தான், அப்போதைய தி.மு.க ஆட்சி காலத்திலேயே நில அபகரிப்பு, மோசடி மற்றும் போலி பத்திரங்கள் குறித்து 6,615 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. சென்னை காவல்துறையின்  மத்திய காவல் பிரிவு நில ஆக்கிரமிப்பு மற்றும் மோசடி குறித்து  விசாரிக்கஉதவி ஆணையாளர் தலைமையில் தனிப் பிரிவு ஒன்று இருந்தது. எனினும், புகார் அளிக்கவே பலர் அச்சம் கொண்டு புகார் அளிக்காமல் இருந்தனர். பெறப்பட்ட புகார்களிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இனங்களில் கூடசரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இவ்வாறு தங்கள் உடைமைக்கும், உயிருக்கும் அஞ்சியே மக்கள் இருந்த காரணத்தால் தான், அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருந்தது என்றே எவரும் தெரிவிக்கின்றனர். குற்றங்கள் குறித்து காவல் துறையினரிடம் புகார்கள் அளிக்கப்படும் போதுஅந்தப் புகார்கள் பதிவு செய்யப்படாமலும், விசாரணை செய்யப்படாமலும் இருந்தால்,காவல் துறை மீது பொதுமக்களுக்கு உள்ள நம்பிக்கை போய்விடும்.

அவ்வாறு பொதுமக்கள் நம்பிக்கை இழக்கும் போது, காவல் துறை எந்த நடவடிக்கையும்எடுக்காது என்பதால், புகார் அளிப்பதால் எந்த பயனும் இல்லை என புகார் அளிப்பதைக் கூட மக்கள் நிறுத்தி விடுவர். அதன் காரணமாகவும், காவல் துறை நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவும், குற்றங்கள் பெருகுவதோடு, சட்டம்- ஒழுங்கும் பாழ்படும். இந்த நிலைமை தான் அப்போதைய தி.மு.க. ஆட்சியில்இருந்தது. மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகில் உள்ள திருவாலய நல்லூரில் உள்ள கிடங்கிற்கு 12.7.2010 அன்று வந்த லாரியில் இருந்து 135 ஹார்லிக்ஸ் பெட்டிகள், அதாவது 3,240 ஹார்லிக்ஸ் பாக்கெட்டுகள் கொள்ளை போன நிகழ்வை உறுப்பினர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என எண்ணுகிறேன்.

அது தொடர்பாக சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அந்தப் புகாரினை காவல் துறை அதிகாரி பதிவு செய்ய மறுத்துவிட்டார். இது குறித்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தது. காவல் துறையினரால் விசாரணைமேற்கொள்ளப்பட்டு இவ்வழக்கு கண்டுபிடிக்க முடியாத  வழக்கு என முடிவுசெய்யப்பட்டு 29.12.2010 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இது போன்ற நிகழ்வுகளால் தான் அப்போது சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து கொண்டே வந்தது. குற்ற நிகழ்வுகள் கடந்த 5 ஆண்டுகளில் குறைந்து வந்துள்ளன. எனது தலைமையிலான அப்போதைய அ.தி.மு.க ஆட்சியின் இறுதியில் 2005-ஆம் ஆண்டில் கொலைகளின் எண்ணிக்கை 1,366 என இருந்தது. இது கடந்த தி.மு.க ஆட்சியின் இறுதியில் 2010-ல் 1,715 ஆக உயர்ந்தது. கடந்த 2015-ஆம் ஆண்டு கொலைகளின் எண்ணிக்கை 1,641 என குறைந்துள்ளது.இதே போன்று ஆதாயக் கொலைகள் எண்ணிக்கை 2005-ல்  74 ஆகஇருந்தது, 2010-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியின் இறுதியில், 153  ஆக உயர்ந்து இருந்தது. 2015-ஆம் ஆண்டில் எனது ஆட்சியில்  இவ்வழக்குகள் 107 என குறைந்துள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு  தாக்கலான 1,641 கொலை வழக்குகளில், பெரும்பாலான கொலை சம்பவங்கள் குடும்ப பிரச்சனைகள், காதல் விவகாரங்கள்,பணம் கொடுக்கல் வாங்கல், நிலப் பிரச்சனைகள், தனிப்பட்ட முன்விரோதம்,  வாய் தகராறு போன்ற காரணங்களினால் நிகழ்ந்துள்ளன. ஒரு சில கொலை சம்பவங்கள் மட்டுமே, பழிவாங்குதல், போக்கிரித்தனம்,  ஆதாயம் போன்றகாரணங்களுக்காக நடந்துள்ளன.

தனிப்பட்ட முன்விரோதம், பணம் கொடுக்கல் வாங்கல், சொத்து பிரச்சனைகள், கணவன், மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களிடையே இருந்துவரும் பிரச்னைகள் போன்ற சில தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் காவல் துறையினரிடம் புகார் அளிப்பதில்லை. அப்பிரச்சனைகள் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் போதே காவல் துறையினரிடம் தெரிவித்தால், அப்பிரச்னைகளில் தக்க நடவடிக்கை எடுத்து, அப்பிரச்னைகளை முடிவுக்குகொண்டுவர இயலும். சம்பந்தப்பட்டவர்கள் காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்காமல்  இருந்து விடுவதால், காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு அச்சம்பவங்களைத் தடுக்க வாய்ப்பில்லாமல்  போய்விடுகிறது.இருப்பினும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்  துறையினர் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு 1,763 கொள்ளை வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 847 கொள்ளை வழக்குகள்  தாக்கலாகியுள்ளன. இவ்வழக்குகளை 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதாவது தி.மு.க ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும் போது, 2015 ஆம் ஆண்டு 2.97 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2015 ஆம் ஆண்டு 11,196 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 5,868 களவு வழக்குகள் தாக்கலாகியுள்ளன. 2010 ஆம் ஆண்டு வழக்குகளை, அதாவது தி.மு.க ஆட்சியில் இருந்ததை, 2015 ஆம் ஆண்டு தாக்கலான  வழக்குகளோடு ஒப்பிடுகையில் 23.23 சதவீதம் குறைந்துள்ளன. 2010 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில் கொலை வழக்குகள் உட்பட  சொத்து சம்பந்தமாக 23,068 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. கடந்த 2015 ஆம்  ஆண்டு 19,931 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. இவ்வாண்டு 30.6.2016 வரை 9,979 வழக்குகள் தாக்கலாகியுள்ளன. தி.மு.க ஆட்சியில் 2010-ஆம்  ஆண்டு தாக்கலான மொத்த சொத்து வழக்குகளை 2015 ஆம் ஆண்டு தாக்கலான வழக்குகளோடு ஒப்பிடும் போது 3,137 வழக்குகள்  குறைந்துள்ளன. காவல் துறையினர், குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்து பல முக்கிய கொலை, கொள்ளை வழக்குகளில் எதிரிகளைக் கைது செய்து, களவு போன பொருட்களை மீட்டு வருவதுடன், தொடர்ந்து குற்றம் செய்யும் குற்றவாளிகளை தடுப்புக் காவலில் வைத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல் துறையினர், சென்னை உள்ளிட்ட பிற நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் பகல் மற்றும் இரவு ரோந்துகள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல், பொதுமக்களிடையே குற்றங்கள் நடக்கும் முறை குறித்தும், அவற்றை தவிர்ப்பதற்குண்டான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுநல அமைப்புகள், குடியிருப்பு சங்கங்களின் உறுப்பினர்களை ரோந்து பணிகளுக்கு பயன்படுத்துதல், மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள் மற்றும் வியாபார ஸ்தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பணியிடங்கள் போன்றவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல், வழக்கமான குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தல், கொலை வழக்கு எதிரிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்தல், கூலிப்படையினர் நடவடிக்கைகள் குறித்து முன்கூட்டியே தகவல் சேகரித்து அவர்களை கைது  செய்தல் போன்ற குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகரிப்பு, வளர்ந்து வரும் பொருளாதாரம், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம், மாறி வரும் சமுதாய சூழ்நிலை மற்றும் நகரமயம் ஆகுதல் போன்றவற்றால் குற்ற நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது தான் இந்திய அளவில் உள்ள நிலை. ஆனால் இதற்கு மாறாக, தமிழ்நாட்டை, நமது மாநிலத்தைப் பொறுத்தவரை காவல் துறையினர், குற்றவாளிகள் மீது எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளினால், குற்ற நிகழ்வுகள் குறைந்து வந்துள்ளன என்பதை தற்போது நான் தெரிவித்த புள்ளி விவரங்கள் தெளிவாக்கும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கழுத்தை அறுத்து சிறுவன் படுகொலை கொலையாளிகளை பிடிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் நேரில் விசாரணை

210 கடலூர்: திட்டக்குடி அருகே உள்ள சித்தேரியை சேர்ந்தவர் முருகேசன். தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவர்களது மகன் நித்தீஷ்(4). இவன் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452