தமிழக காவல்துறையின் இ-சேவைகள்

Admin
1 0
Read Time19 Minute, 38 Second
தமிழக காவல்துறையின் இணையதளத்தில் வழியாக பொதுமக்களுக்கு பல்வேறு இணையவழி சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வசதி வாயிலாக பொதுமக்கள் பல்வேறு சேவைகளுக்காக காவல்துறையினை நாடுவதற்குரிய வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவைகள் அனைத்தும் தேசிய திட்டமான குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் அமைப்பானது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒரு உன்னதத் திட்டமாகும். இத்திட்டமானது தமிழகம் முழுவதும் உள்ள 1913 காவல் நிலையங்களிலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக்கூடிய 372 சிறப்பு காவல் பிரிவிற்கும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்

காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்போதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளரா என்ற விவரம் சரிபார்க்கப்படும். தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றிய விவரங்கள் மட்டும் இச்சேவையின் மூலம் சரிபார்க்கப்படும்.

செயல்படும் முறை

விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் காவல் முன் நடத்தை சரிபார்ப்புப் பணி முடிக்கப்படும். காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியமில்லை.

பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்காக இணையதளம் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும், அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். காவல் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள QR குறியீட்டினை (QR CODE) ஸ்கேன் செய்தும் அல்லது காவல் சரிபார்ப்பு சேவையிலுள்ள சரிபார்ப்பு (verify) என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

PVR எண்ணைப் பயன்படுத்தி இணையதளம் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். இச்சேவை தொடர்பாக எழும் வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை FAQs தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டியவை

மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் (Feedback) என்ற பகுதியினைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் இணையதளம் வழியாக புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாநகர ஆணையருக்கு மற்றும் சென்னை மாநகர நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையர்-2 ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.

விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும். அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், காவல் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டணைக்குரிய குற்றமாகும்.

தமிழக காவல்துறை இணையதளம் வழியாக கீழ்கண்ட இணையவழி சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
 • காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை
 • இணையவழி புகார் பதிவு செய்தல்
 • முதல் தகவல் அறிக்கையினை பார்வையிடுதல்-பதிவிறக்கம் செய்தல்
 • முதல் தகவல் அறிக்கை, சமுதாயப்பணி பதிவேடு மற்றும் இணையவழி; புகாரின் நிலை குறித்து பார்வையிடும் வசதி
 • வாகனங்கள் தேடும் வசதி
 • காணாமல் போனவர்கள்-அடையாளம் தெரியாது பிரேதங்களை தேடும் வசதி
 • சாலை விபத்து வழக்கு ஆவணங்களை பதிவிறக்கம் செய்யும் வசதி
 • காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான அறிக்கை
 • கைபேசி குறுங்செய்தி சேவைகள்

 

‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’

‘காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவை’ என்ற ஒரு புதிய இணைய வழி சேவையினை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பின்வரும் சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

 1. தனிநபர் விவரம் சரிபார்ப்பு
 2. வேலை நிமித்தமான சரிபார்ப்பு
 3. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு
 4. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு

மேற்படி சேவையினைப் பயன்படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500 மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000 வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் இணைய வழி வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒருமுறையினைப் பயன்படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம்.

இணையவழி புகார் பதிலு செய்தல்

இணையவழி புகார் பதிவு செய்யும் வசதியினைப் பயன்படுத்தி பொதுமக்கள் அவர்தம் இல்லத்தில் அமர்ந்தபடி காவல் துறைக்கு புகார் அனுப்பலாம். ஆவர் அளித்துள்ள புகார் நிலை குறித்து இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். புகார் பதிவு செய்யப்பட்டவுடனும், புகார் மீது நடவடிக்கை எடுக்கபட்ட பின்னரும் அதுகுறித்த விவரத்தினை, புகார்தாரரால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு ஒரு குறுங்செய்தி வாயிலாக தகவல் அனுப்பி வைக்கப்படும். மேலும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த புகார்தாரரின் கருத்துக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்-காவல் ஆணையரின் CCTNS  மின்னஞ்சல் முகவரிக்கு தானியங்கி முறையில் தகவல் அனுப்பி வைக்கப்படும். தற்பொழுது மாதம் ஒன்றிற்கு தோராயமாக 7000 இணையவழி புகார்கள் பெறப்படுகின்றன.

முதல் தகவல் அறிக்கையினை பார்வையிடுதல்-பதிவிறக்கம் செய்தல்

15.11.2016 முதல், ஒரு சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை தவிர ஏனைய அனைத்து வழக்குகள் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கைகளை இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பார்வையிடலாம் அல்லது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த வசதியானது மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் இவ்வசதியினை பயன்படுத்தி தோராயமாக 2,00,000 முதல் தகவல் அறிக்கை தொடர்பான விவரங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் சிறப்புப் பிரிவுகளிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைபின்னல் மென்பொருள் அமைப்பில் கணினியில் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கும் முறையினை 15.04.2016 முதல் ஏற்படுத்தப்பட்டதன் பயனாக இவ்வசதி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை-சமுதாயப்பணி பதிவேட்டின் நிலை குறித்து பார்வையிடுதல்

இவ்வசதியினை பயன்படுத்தி வழக்கு சம்பந்தமான முதல் தகவல் அறிக்கை- சமுதாயப் பணி பதிவேட்டின் நிலை தொடர்பான விவரங்களை புகார்தாரர்கள் இணையதளம் வழியாக அறிந்து கொள்ளலாம்.

வாகனங்களை தேடுதல்

இவ்வசதியின் மூலம் ஏற்கனவே உபயோகப்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அவ்வாகனம், ஏதேனும் திருட்டு வழக்கு அல்லது விபத்து வழக்கு எதிலும் தொடர்புடையதா என்ற விவரத்தினை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். பெரும்பாலான பொதுமக்கள் இவ்வசதியினை பயன்படுத்தி வருகின்றனர்.

காணாமல் போனவர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதங்களை தேடுதல்

குற்றம் மற்றும் குற்றவாளிகள் கண்காணிக்கும் வலைபின்னல் அமைப்பில், காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டவுடன், காணாமல் போனவரின் புகைப்படம் மற்றும் அங்கமச்ச அடையாள விவரங்கள் பொதுமக்கள் காணும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இவ்வசதியினை பயன்படுத்தி, காணாமல் போன நபரின் உறவினர்கள்-நண்பர்கள் காணாமல் போன நபரினை பற்றிய விவரங்களை தேடலாம். மேலும் அடையாளம் தெரியாத பிரேதம் பற்றிய வழக்கு பதிவானவுடன், புலன்விசாரணை அதிகாரி, இவ்வசதியினை பயன்படுத்தி காணாமல் போனவர்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காண்பதற்கான முயற்சியினை மேற்கொள்வார்கள். இவ்வசதியினை பயன்படுத்தி இதுநாள் வரையில் 459 அடையாளம் தெரியாத பிரேதங்கள், காணாமல் போனவர்களுடன் ஒப்பிடப்பட்டு காவல் துறையால் கண்டறியப்பட்டுள்ளன
மேலும், மனநிலை சரியின்மையால் யாரேனும் காணாமல் போயிருந்தால், அவர்கள் மீட்கப்பட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ உதவி கொடுக்கப்படுவார். இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களின் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை மீட்கப்பட்டவர்கள் (Found By NGO) என்ற வசதியின் மூலம் பொதுமக்கள் காணலாம். இவ்வசதியின் மூலம், இதுவரை 6 காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கபட்டு அவர்களின் உறவினர்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறுஞ்செய்தி சேவை

பொதுமக்களுக்கு விரிவான சேவை வழங்கும் நோக்கில், குறுஞ்செய்தி அனுப்பும் வசதி தமிழக காவல்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது கீழ்கண்ட சேவைகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகின்றன.
இணையவழி புகார் பதிவு செய்தவுடன்-இணையவழி புகார் விசாரைண முடிவடைந்தவுடன் முதல் தகவல் அறிக்கை-சமுதாயப் பணி பதிவேடு விசாரணை முடிவடைந்தவுடன் கைது செய்யப்பட்ட விவரத்தினை கைதியின் உறவினர்களுக்கு தெரியப்படுத்துதல்.

சாலை வாகன விபத்து வழக்கின் புகார்தாரருக்கு இழப்பீடு தகுதி குறித்த விழிப்புணர்வு செய்தி

இணைய வழி புகார் பதிவு செய்யபட்டவுடன், புகார்தாரருக்கு குறுஞ்செய்தி அனுப்புவதுடன், சம்பந்தப்பட்ட காவல் நிலைய அலுவலருக்கு ஒரு குறுஞ்செய்தி எச்சரிக்கை அனுப்பப்படும். இந்த குறுங்செய்தியானது அனுப்புனர் பெயர் TNPOLS மூலம் மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. மேற்கண்ட வசதி ஏற்படுத்தப்பட்ட பின்னர், ஜனவரி 2017 முதல் இதுநாள் வரையில், 18,94,701 குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.

சாலை விபத்து சம்பந்தமான ஆவணங்களை பரிமாற்றம் செய்யும் வசதி

இவ்வசதியானது நாட்டிலேயே முதன்முறையாக தமிழகத்தில் இணையதளம் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலை விபத்தால் பாதிக்கபட்டவரின் உறவினர்கள் காப்பீடு நிறுவனத்திலிருந்து உரிய இழப்பீட்டை விரைவாக பெறுவதற்கான இவ்வசதி 30.08.2017 அன்று தொடங்கப்பட்டது. வழக்கு விசாரணையின் பொழுது, காவல்துறைக்கு அளித்த கைபேசி எண்ணினை பயன்படுத்தி பயனாளர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை, ஒரு ஆவணத்திற்கு ரூ.10- வீதம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இக்கட்டணத்தினை இணையதளம் வழியாக செலுத்தலாம்.விபத்தால் பாதிககப்பட்டவர்கள் மேற்படி ஆவணங்களை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, உரிய இழப்பீடு பெறுவதற்காக மோட்டார் வாகன தீர்ப்பாயத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த வசதி காப்பீடு நிறுவனங்களுக்கு மற்றும் காப்பீடு தீர்ப்பாயங்களுக்கு 29.03.2017 அன்று வழங்கப்பட்டது. காப்பீடு நிறுவனங்கள் ஒரு ஆவணத்திற்கு ரூ.100- வீதம் செலுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காணாமல் போன ஆவணங்கள் பற்றிய அறிக்கை

கீழ்கண்ட ஆவணங்கள் காணாமல் போனால், இணையதளம் வழியாக தகவல் அளித்து, காணாமல் போன ஆவண அறிக்கையின்படி உடனே பெற்று கொள்ளலாம்.
• கடவுச் சீட்டு
• வாகன பதிவு சான்று
• ஓட்டுநர் உரிமம்
• பள்ளி- கல்லூரி சான்றுகள்
• அடையாள அட்டை
இந்த வசதியானது ஆகஸ்ட் 2017 ல் துவக்கபட்டது. இந்த வசதியின் மூலம் கிடைக்கபெற்ற அறிக்கையினை, ஆவணங்கள் வழங்கும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். இந்த வசதி ஏற்படுத்திய பின்னர் பொதுமக்கள் காணாமல் போன ஆவணங்கள் பற்றி காவல்துறை அறிக்கையினை பெறுவதற்காக நடைமுறைகள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதுநாள் வரையில் 1,55,000க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வசதியினை பயன்படுத்தியுள்ளனர்.

பொதுமக்களுக்கான கைபேசி செயலி

பொதுமக்களுக்கான கைபேசி செயலியானது ஜீலை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் இக்கைப்பேசி செயலியினை தமிழக காவல்துறை இணையதளத்தில் அல்லது கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய வழி சேவைகளை இந்த செயலி வழியாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

இ-சேவை மையம் வழியாக வழங்கப்படும் சேவைகள்

தமிழக காவல் துறையின் இணையவழி சேவைகளை ஒரு நியாயமான குறைந்தபட்ச கட்டணத்தினை செலுத்தி அரசு இ-சேவை மையங்களிலும் பெற்று கொள்ளலாம்.

சாட்சிகளுக்கு குறுஞ்செய்தி வழியாக அழைப்பாணை அனுப்பும் வசதி

நீதிமன்றத்திலிருந்து சாட்சிகளுக்கான அழைப்பாணை பெறப்பட்டவுடன், அதுபற்றிய விவரங்களை சாட்சிகளுக்கு குறுஞ்செய்தி வழியாக அனுப்பும் வசதி 04.01.2018 முதல் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திலிருந்து சாட்சிகளுக்கான அழைப்பாணை பெறப்பட்டவுடன் அதுபற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள CCTNS ல் பதிவு செய்யப்படுகிறது. கணினியால் தயாரிக்கப்பட்ட தமிழ் குறுஞ்செய்தியானது. சாட்சிகளின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு தானியங்கி முறையில் அனுப்பி வைக்கப்படுகிறது. சாட்சிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை அனுப்புவதற்கு தற்பொழுதுள்ள நடைமுறையுடன் கூடுதலாக இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உரிய காலக்கெடுவிற்கும் முன்னதாகவே சாட்சிகளுக்கு அழைப்பாணை குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பப்படுவதால், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு உரிய காலத்தில் திட்டமிட வசதியாக உள்ளது.
Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பள்ளி மாணவ மாணவிகளுக்கு நற்கருத்துக்களை பகிர்ந்த காவல் ஆய்வாளர்

1,799 திருப்பூர் : டாக்டர்.திரு.A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பெரிச்சிபாளையம் அரசினர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருப்பூர் மாநகர் தெற்கு காவல் நிலைய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami