Wed. May 22nd, 2019

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு

14 Views

மதுரை : மதுரை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 195 திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இன்று 07.05.2019 காவல்துறை தலைமை இயக்குநர் (தேர்தல்) திரு. அசுதோஸ் சுக்லா, இ.கா.ப அவர்கள் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்கள். மதுரை காமராசர் பல்கலை கழக அரங்கில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப, தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.சண்முக ராஜேஸ்வரன் இ.கா.ப, மதுரை சரக துணைத்தலைவர் திரு.பிரதீப்குமார் இ.கா.ப, மதுரை மாநகர், காவல் துணை ஆணையர், தலைமையிடம் திரு. மகேஷ், இ.கா.ப, மதுரை மாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு துணை ஆணையர் திரு. சசிமோகன், இ.கா.ப மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப, மேலும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் காவல் உதவி ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.

195 திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் 19.05.2019 -ம் நாளன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தல் பணிக்கு 3614 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேற்கண்ட தொகுதியில் 297 வாக்குச்சாவடிகள் 106 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் 105 பறக்கும் படை குழுக்கள் (Flying Squad) 36 நிலையான காண்காணிப்பு குழுக்கள் (Static Surveillance Team) அமைக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் 134 மற்றும் மதுரை மாநகரத்தில் 47 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் முந்தைய தேர்தல்களில் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் (Vulnerable Polling Stations) என கண்டறியப்பட்டு அதன்மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுவருகிறது.

தேர்தல் தொடர்பாக மதுரை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் நிலுவையில் இருந்த 270 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 1670 நபர்கள் மீது தேர்தலின் போது சட்டம் ஒழுங்கிற்கும் மற்றும் பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்க வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தினால் அவர்களின் மீது தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உறுதி பிணை பத்திரம் (Security Bond) பெறப்பட்டு அவர்கள் காவல்துறையினரின் கண்காணிப்பில் உள்ளனர். மேலும் அத்தகைய நபர்களை கண்டறிந்து உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க இந்த ஆய்வுக் கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் (தேர்தல்) அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

இந்த ஆண்டு மதுரை மாநகரில் 22 நபர்களும் மதுரை மாவட்டத்தில் 18 நபர்களும் மொத்தம் 40 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேற்படி திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுரை மாநகரில் 18 இடங்களிலும், மதுரை மாவட்டத்தில் 27 இடங்களிலும் மொத்தம் 45 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு முழுஅளவில் வாகனதணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எவ்வித சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் இன்றி தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக பெறப்படும் அனைத்து புகார்களின் மீதும் உரிய விசாரணை நடத்தி எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பதற்றம் நிறைந்தவை என கண்டறியப்பட்ட பகுதிகளில் அடிக்கடி ரோந்து செல்லவும் பொதுமக்கள் தேர்தலின் போது அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க காவல் துறை அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாதவாறு தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு தேவையான அளவில் நிலைக்குழுக்களும் (Pickets) அதிவிரைவுப்படையினர் ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கென பிரத்தியேகமாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டு தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் கண்காணிக்கப்பட்டுவருகிறது.

காவல்துறை தலைமை இயக்குனர் (தேர்தல்) அவர்கள் இந்த ஆய்வுக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் செய்யப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வினை நடத்தினார். ஆய்வின் போது காவல்துறையினரையும் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரையும் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தி நடைபெறவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் பாதுகாப்பு பணியினை மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்கள். மத்திய பாதுகாப்பு படையினரையும் நிலைமைக்கு ஏற்ப தேவையான அளவு பணியமர்த்த அறிவுரை வழங்கினார்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!