Wed. May 22nd, 2019
169 Views

பூட்டிய வீட்டில் இருந்து 13 சவரன் நகை திருட்டு

கோவை, விளாங்குறிச்சி அருகே உள்ள திருக்குமரன் வீதியைச் சேர்ந்தவர் சரவணன். சரவணன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஒர் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர்களது பெண் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த 1ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் சரவணன் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த சங்கிலி, 4 ஜோடி கம்மல், மோதிரம் உள்ளிட்ட 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனர். இது குறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


பிக்பாக்கெட்திருடன் கைது
சிங்காநல்லுாரை சேர்ந்தவர் மாசாணி(42). இவர் நேற்று முன்தினம் காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்தபோது இவரது மணிபர்சை பணத்துடன் திருடி தப்ப முயன்ற, தர்மபுரியை சேர்ந்த சண்முகம்(34) என்பவரை பொதுமக்கள் பிடித்து, காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் வழக்கு பதிந்து சண்முகத்தை கைது செய்தனர்.


வாலிபரை தாக்கிய இருவர் கைது
கோவை பீளமேடு விளாங்குறிச்சி ரோட்டை சேர்ந்தவர் நவநீதன் (19) என்பவர் தனது பைக்கை எல்லைத்தோட்டம் பகுதியை சேர்ந்த முகமது ஷெரிப்(29), என்பவரிடம் பழுது நீக்க கொடுத்தார். இதற்கான பணத்தில் 300 ரூபாய் தர வேண்டி இருந்தது. இந்த பணத்தை கேட்டு முகமது ஷெரிப் தனது நண்பர்கள் தினேஷ் (28) மற்றும் அன்பரசன் ஆகியோருடன் சேர்ந்து நவநீதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முகமது ஷெரீப் மற்றும் தினேசை கைது செய்தனர்.


மது விற்றவர்கள் கைது
மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் பல்வேறு இடங்களிலும், வெரைட்டிஹால் ரோடு காவல்துறையினர் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!