Mon. Sep 16th, 2019

ஈரோடு முதியவர்கள் கொலை வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய காவலர்களுக்கு, ஈரோடு SP பாராட்டு

202 Views

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கடந்த 20/02/2019 அன்று எக்கட்டாம்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக இருந்த முதியவர் துரைசாமியும் (69) அவரது மனைவி துளசிமணி (60) ஆகிய இருவரும் அருவாளால் வெட்டியும் இரும்பு பைப்பால் தாக்கியும் கொடுரமாக கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைகள் குறித்து சென்னிமலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையை துவக்கிய காவல்துறையினர் சொத்துக்காக நடந்திருக்கலாமா? அல்லது நகைகாக கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரித்த காவல்துறையினர் துப்பு கிடைக்காததால் விசாரணையை துரிதப்படுத்தினர்.

பின்னர் ஈரோடு உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.ராஜாகுமார் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இத்தனிப்படையில் சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ், கொடுமுடி ஆய்வாளர் திரு.மணிகண்டன், உதவி ஆய்வாளர்கள் திரு.ராம்பிரபு, திரு.பரமேஸ்வரன், திரு.குமரேசன் ஆகியோருடன் குற்றபிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் துரைசாமி, ராதாகிருஷ்ணன், ஏட்டுகள் லோகநாதன், காந்தி, மேகநாதன் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இத்தனிப்படையினர் தீவிரமாக இவ்வழக்கை கையாண்டதில் கொலைக்கான காரணமும் மர்மமும் விலகி குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.

தனியாக இருந்த பெண்ணிடம் பலவந்தமாக பாலியல் தொந்தரவளித்ததே கொலைக்கான காரணம். தஞ்சை மாவட்டம் பேராவூரணி பூக்கொல்லை சமுதாயபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (எ) முகமது ராஜா (31). தேங்காய் வியாபாரி இவரது மனைவி சாகிராபானு (28). இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள். திருமணத்திற்கு பின் மனைவியின் மதத்திற்கு மாறிய பிரகாஷ் தனது பெயரையும் முகமது ராஜா என்று மாற்றிக்கொண்டார். இந்நிலையில் காதல் திருமணம் புரிந்த தம்பதிகள் பிழைப்பு தேடி தனக்கு தேங்காய் வியாபாரம் மூலம் ஏற்கனவே அறிமுகமான சென்னிமலை துரைசாமியின் ஊருக்கு மனைவியை அழைத்துக்கொண்டு வந்துள்ளார் முகமது ராஜா.

இங்கு சென்னிமலை அருகே திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள திட்டுப்பாறை என்ற இடத்தில் துரைசாமி ஏற்பாட்டில் தேங்காய் களம் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

கடந்த 11/2/2019 அன்று தனது மனைவி சாகிராபானுவை அழைத்துக்கொண்டு துரைசாமியின் தோட்டத்திற்கு சென்று தேங்காய் பறிக்கும் வேலை செய்திருக்கிறார். தேங்காய்கள் பறித்து முடித்ததும் பறித்த தேங்காய்களை ஒரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தான் களம் அமைத்திருக்கும் திட்டுபாறைக்கு வந்திருக்கிறார். அப்போது தன் மனைவியிடம் தான் திரும்பி வரும்வரை துரைசாமியின் தோட்டத்திலேயே இருக்க சொல்லிவிட்டு முகமதுராஜா தேங்காயுடன் கிளம்பிவிட்டார். அவர் கிளம்பிய சிறிது நேரத்தில் 69 வயது கிழவனான துரைசாமிக்கு 28 வயது இளம் பெண்ணான சாகிராபானு மீது சபலம் ஏற்பட்டுள்ளது.

அந்த சபலத்தை செயலாக்க முடிவெடுத்த துரைசாமி காலையில் இருந்து வேலை செய்து ரொம்ப களைப்பாய் இருப்பாய் போலிருக்கு வாம்மா குடிக்க கொஞ்சம் தண்ணியாவது குடி என்று கரிசனம் காட்டியிருக்கிறார். இதை நம்பி அவரது பின்னால் சென்று தண்ணீரை வாங்கி குடித்த சாகிராபானுவிடம் பாலியல் ரீதியான சில்மிச வேலைகளை செய்திருக்கிறார். இதை கண்டு திடுக்கிட்ட சாகிரா துரைசாமியிடம் இருந்து தப்பித்து வீட்டிற்கு வெளியே ஓடி வந்துவிட்டார்.

இந்தசம்பவத்திற்கு பின் இரண்டு நாட்களாக முகம் வாடியநிலையில் காணப்பட்ட சாகிராவை முகமதுராஜா விசாரிக்கையில் தனது கணவரிடம் துரைசாமி தன்னிடம் நடந்து கொண்டதை போட்டு உடைத்திருக்கிறார். இதனால் ஆத்திரப்பட்ட முகமது ராஜா கடந்த 19/2/2019 அன்று ஊரில் இருக்கும் தனது நண்பர்கள் இஜாஸ் முகமது (31), மணிகண்டன் (25) ஆகியோரிடம் தகவலை கூறி வரவழைத்திருக்கிறார்.

20/2/2019 அன்று காலை முகமது ராஜாவீட்டிற்கு வந்த அவரது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் மதுவின் போதையில் நண்பர்கள் மூவரும் சாகிராபானுடன் துரைசாமியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இரவு நேரமாகிவிட்டதால் ரோட்டிலும் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டுள்ளது.

இதனால் துரைசாமி வீட்டுக்கு சென்றவர்கள் துரைசாமியை இரும்பு பைப்பால் சராமாரியாக தாக்கியுள்ளனர். அரிவாளாலும் வெட்டியுள்ளனர், இதை தடுக்க வந்த துரைசாமி மனைவி துளசிமணியையும் தாக்கியுள்ளனர். இதில் துரைசாமியும் அவரது மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்.

இதன் பின் தனது நண்பர்களை ஊருக்கு அனுப்பிவைத்த முகமதுராஜா மறுநாள் தானும் மனைவியை அழைத்துக்கொண்டு தனது ஊருக்கு சென்று விட்டார். இதையடுத்து கொலையாளிகளின் செல்போன் சிக்னலை வைத்து திறமையாக கையாண்டு குற்றவாளிகளை, பேராவூரணி காவல்துறையின் உதவியுடன் சென்னிமலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. செல்வராஜ், சென்னிமலைக்கு காவல் நிலையத்திற்கு நியமனம் செய்த நாள் முதல் அப்பகுதியில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. மேலும் கொலைக்குற்றங்களை விரைவாக கண்டுபிடித்து குற்றவாளிகள் மீது துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ் அவர்களின் அணுகுமுறை மற்றும் காவலர்களை வழிநடத்தும் திறன், ஈரோடு காவல் துறையினரை சிறப்பாக செயல்பட ஏதுவாக உள்ளது. துடிப்புமிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டது குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னிமலை காவல்துறையினர் இவ்வழக்கை சிறப்பாக துப்புதுலக்கி குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை ஈரோடு காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேஷ், மேற்கு மண்டல ஐஜி, டிஐஜி ஆகியோர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

 

 

ஈரோட்டிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. R. கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

திரு. N. செந்தில்குமார்.
ஈரோடு மாவட்ட பொதுசெயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா

 

 

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!