Sun. Jan 20th, 2019

திருவள்ளூரில் கடந்த ஆண்டில் 2.26 லட்சம் வழக்குகள் பதிவு, ரூ.3.04 கோடி அபராதம்

19 Views

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2018 ஆண்டில் மட்டும் சாலை விதிமுறைகளை மீறிய வாகனங்களை இயக்கியதாக 2.26 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு அபராதமாக ரூ.3.04 கோடி விதித்துள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டில் மணல் கடத்தல், சாராயம் கடத்தல் மற்றும் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் 39 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் 511 திருட்டு வழக்குகளில், 396 வழக்குகளில் களவுப் பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டுநர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி, கடந்த ஆண்டில் 7,796 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதை மீறி, சாலை பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்குதல், அலைபேசியை பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்குதல் ஆகிய குற்றங்களின் கீழ் மொத்தம் 2,26,317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.3 கோடியே 4 லட்சத்து 15 ஆயிரத்து 120 வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திலிருந்து மலிவு விலை மதுவகைகளைக் கடத்தி வந்து எல்லையோர கிராமங்களில் விற்பனை செய்த நபர்கள் மீது 3,876 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 782 பெண் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும் திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்