Sat. Feb 23rd, 2019

மறைந்த ADSP சம்பிரிய குமார் குறித்து நெகிழும் காவலர்கள்

109 Views
காவல் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சாம்பிரியா குமார் உடல் நலக்குறைவால் கடந்த 22 ஆம் தேதி காலமானார்.
 
நேர்மையாகப் பணியாற்றி வந்த இவர் போதிய நிதிவசதி இல்லாத காரணத்தால் அரசு பொதுமருத்துவ மனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்றுவந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றிக் காலமாகிவிட்டார்.
 
தன் பணிக்காலத்தில் 6 வருடத்தில் 23 முறை பணியிடமாற்றம் செய்யப்பட்டவர். நேர்மையற்ற எந்த விஷயத்துக்கும் துணை போனதில்லை. பணிக்காலத்தில் பலமுறை பழிவாங்கப்பட்டவர். இருந்தாலும் மக்கள் பணியாற்ற சம்பிரிய குமார் சளைத்ததில்லை’ ‘லஞ்சம் தலைவிரித்தாடும் துறையில் இருந்தாலும், நான் எவன்கிட்டயும் அஞ்சு பைசா வாங்கினதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொன்னவர்.
 
ஆணவமும் அதிகாரச் செருக்கும் நிறைந்த காவல் துறையில் ஈரம் நிறைந்த மனதுடன் வாழ்ந்தவர் ஏடிஎஸ்பி சம்பிரிய குமார். இன்று உயிருடன் இல்லை. புற்றுநோய் அவரை காவுகொண்டுவிட்டது. கடந்த 5 மாதமாகப் புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த சம்பிரிய குமார், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கடந்த 22 ஆம் தேதி இரவு மரணமடைந்தார்.
 
காவல் துறைக்குள்ளேயே இருந்தாலும் தவறிழைக்கும் காவல் அதிகாரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர். தூத்துக்குடி சம்பவத்துக்கு காவல் துறையிலிருந்து ஓர் எதிர்ப்புக்குரல் கிளம்பியது என்றால், அது சம்பிரிய குமாரின் குரல்தான்.
 
மக்களுக்கு எதிராக எந்தத் திட்டம் இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைரியமாக தன் கருத்தை வெளியிடுவது இவரின் வழக்கம். இதனால், காவல்துறைக்குள்ளேயே சம்பிரிய குமாருக்கு எதிரிகள் அதிகம்.
 
தீங்கு இழைத்தவனுக்கும் நன்மை செய்! என்பதுதான் இவரின் தாரகமந்திரம். சப்-இன்ஸ்பெக்டராக சிறைத் துறையில் பணிபுரிந்த சமயத்தில்தான் அவருக்கும் திருமணம் ஆகியுள்ளது. புதிதாக திருமணம் ஆனவருக்கு விடுமுறை அளிக்காமல் இவரின் உயரதிகாரி வேலைவாங்கியுள்ளார். இதனால், சில சமயங்களில் இவரின் மனைவியே சம்பிரிய குமாரைக் காண வருவது உண்டு. சக ஊழியரின் மனைவி என்றுகூட பார்க்காமல் உயர் அதிகாரிகள் இவர் காதுபடவே தவறாகப் பேசுவார்கள்.
 
அதே உயரதிகாரி, ஓய்வுக்குப் பிறகு மகன்களால் துரத்தப்பட்டு ஊறுகாய் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஒருநாள் இவரிடத்தில் வந்து ஊறுகாய் வாங்குங்கள்’ என்று கேட்டிருக்கிறார். பிள்ளைகள் செய்த துரோகமும் வறுமையும் அவரை ஆளையே மாற்றியிருந்தன. அவரிடத்தில் இருந்த அத்தனை ஊறுகாய் பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு கை நிறைய பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார் சம்பிரிய குமார். அவ்வளவு இளகிய மனம் படைத்தவரைத்தான் புற்றுநோய் பறித்துவிட்டது.
 
காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்தால்கூட ஐயா’ என்கிற வார்த்தையை எதிர்பார்ப்பார்கள். ஆனால் தன்னை யாராவது ஐயா’ என்று அழைத்தால் சம்பிரிய குமாருக்குக் கோபம் தாறுமாறாக வந்துவிடும். அண்ணேனு கூப்பிடுப்பா’ எனத் தனக்குக்கீழ் பணிபுரிபவர்களை அன்புடன் கடிந்துகொள்வார்” என்று அவருக்குக் கீழ் பணிபுரிந்த காவல் ஒருவர் நெகிழ்கிறார்.
 
தனக்குக்கீழ் பணிபுரியும் ஊழியர்களின் முகத்தை வைத்தே அவர்களிடத்தில் உள்ள பிரச்னைகளைக் கண்டுபிடித்துவிடுவார்.
 
சம்பிரிய குமாருக்குக் கீழே பணிபுரிந்த காவலர் ஒருவர், கலப்புத் திருமணம் செய்தவர். இவரிடத்தில் பயிற்சிக்கு வந்துள்ளார். ஆனால், எதையோ தொலைத்தவர்போல இருந்தார். என்னப்பா எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்கியே?’ என்று அந்தக் காவலரிடத்தில் கேட்டுள்ளார்.
 
அவரோ நான் கலப்புத் திருமணம் செய்தவன். மனைவி 8 மாதக் கர்ப்பிணி. அவருக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. அதுதான் என்ன செய்வதெனத் தெரியாமல் தவிக்கிறேன்” என்று பதில் அளித்துள்ளார்.
 
உடனடியாக மேலதிகாரிகளிடம் பேசி சாதாரண கான்ஸ்டபிள் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்தார். பயிற்சியில் இருக்கும்போதே வாரத்துக்கு 3 நாள் வீட்டுக்குச் செல்லவும் அவருக்குச் சிறப்பு அனுமதி வாங்கிக்கொடுத்துள்ளார்.
 
எந்த உதவி வேண்டுமென்றாலும் தயங்காமல் இவரிடத்தில் கேட்கலாம்” என்று போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். சம்பிரிய குமார் ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பார். உதவி வேண்டுமென்று ஃபேஸ்புக்கில் கேட்டாலும் சம்பிரிய குமாரின் கரங்கள் உடனே நீளும்.
 
அன்பு நிறைந்த மனிதர்கள் உலகில் நீண்டகாலம் தங்குவதில்லை. அந்த வரிசையில் சம்பிரிய குமாரை காலன் வெகுசீக்கிரமே அழைத்துக்கொண்டான்.
 
அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
செய்தியை பகிர்ந்து கொள்ள:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இன்றைய செய்திகள்

error: Content is protected !!