4 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற IAS, IPS அதிகாரிகள் மாநாடு, காவல்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் பெருமிதம்

Admin
0 0
Read Time21 Minute, 31 Second

சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச்செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு தொடங்கியது.
நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் மாநாடு நடைபெற்ற இந்த மாநாட்டில் சட்டம் ஒழுங்கு, வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

முக்கியமாக தமிழகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியர் மாநாடு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. 2013 ஆம் ஆண்டுக்குப்பின், ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாடு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட கலெக்டர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அந்தந்த துறையின் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.

மாநாட்டில் முதல் அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-

உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நடைபெறுகின்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உங்களிடம் உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன்.

மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி நடக்கும் இந்த அரசு, பல்வேறு முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்தும், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்தும், அவற்றிற்கு அடிக்கல் நாட்டியும், பல புதிய திட்டங்களை நிறைவேற்றியதன் மூலம், மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றது.

மாண்புமிகு அம்மாவின் அரசு, தமிழ்நாட்டு மக்கள் சேவையில் தனது பணியைச் செம்மைப் படுத்துவதற்கும், அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் மேலும் சிறப்பாகக் கொண்டு சேர்ப்பதற்கும், உங்கள் ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்துவதற்கும் இம்மாநாடு வழிவகை செய்யும். அதுமட்டுமன்றி, மக்களின் வாழ்வு வளம் பெறவும், அவர்களின் நலனைப் பேணிக்காக்கவும், நாம் அனைவரும் முனைப்பாகச் செயல்பட இம்மாநாடு ஒரு தூண்டுகோலாக இருக்கின்றது.

சட்டம் ஒழுங்கை திறமையாகப் பராமரித்தல், பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை வெளிப்படையாகவும், திறமையாகவும், விரைவாகவும் அளித்தல், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புதிய உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக உருவாக்குதல், அமைதி, வளம், வளர்ச்சி என்ற மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லுதல் ஆகியவை இம்மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.
மக்கள் நம் பக்கம் இருக்கிறார்களா என்பதை விட மக்கள் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே எப்போதும்என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. என்னை நம்புகின்ற மக்களுக்கு என்ன என்ன வழிகளில்எல்லாம் நன்மை செய்ய இயலுமோ அந்த வழிகளைப்பின்பற்றி நான் சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கின்றேன்.

இது மாண்புமிகு அம்மா அவர்களின் அமுத மொழி. மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் துறை அதிகாரிகளாகிய நீங்கள், மாண்புமிகு அம்மா அவர்கள் கூறியதை மனதில் கொண்டு, உங்களுக்கு கிடைத்த இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் நலனுக்காக திட்டங்களைச் செயல்படுத்தி, அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாகவும், மக்கள் சேவகர்களாகவும் செயல்படவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாவட்ட ஆட்சித்தலைவர்களும், காவல் துறை அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதன் மூலம் தான், மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்திட இயலும். மேலும், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை அதிகாரிகளும்தான் பொறுப்பு. ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், தாங்கள் வளர்ச்சிப் பணிகளுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும்தான் பொறுப்பு என்று நினைத்துச் செயல்பட்டாலும், காவல்துறை கண்காணிப்பாளர்கள், சட்டம் ஒழுங்கு நிலவரம் பற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெரிவிக்காமல் தன்னுடைய பொறுப்பு மட்டுமே என எண்ணிச் செயல்பட்டாலும், பாதிக்கப்படுவது மாவட்டத்தின் சட்ட ஒழுங்கே! இரு துருவங்கள் போல் இல்லாமல், நீங்கள் இருவரும் இரு கண்களைப் போல் ஒருங்கிணைந்து செயல்பட்டால், சட்டம் ஒழுங்கை மேலும் சிறப்பாகப் பேணிக்காக்க இயலும்.

சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிக்க, கிராம மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள காவல்துறை மற்றும் வருவாய் அலுவலர்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதை முன்கூட்டியே ஒற்று அறிந்து, தங்களுடைய உயரதிகாரிகளுக்கு உடனுக்குடன் அத்தகவல்களை தெரிவிப்பதை தங்களுடைய முக்கியப் பணியாக கருத வேண்டும். முளையிலேயே கிள்ளி எறிவது என்ற பழமொழிக்கு ஏற்ப, சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் முன் அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயங்கரவாதமும், மதவாதமும், இடதுசாரி தீவிரவாதமும் சமுதாயத்தின் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இச்சவால்களை திறம்பட எதிர்கொள்ள, நமது புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்தி, பயங்கரவாத அமைப்புகள் உருவாகாமல் தடுத்து, ஆரம்ப நிலையிலேயே களை எடுக்க வேண்டும். அழிவு சக்திகளை கட்டுப்படுத்தி, மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் நீங்கள் அனைவரும் செயல்படவேண்டும். அவ்வாறு நீங்கள் செயல்பட்டு, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், நமது மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.

தேசிய பாதுகாப்புக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும்.

சாதி மோதல்கள் ஏற்படக்கூடிய பதட்டமான பகுதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும், தங்களுடைய கண்காணிப்பு வளையத்திற்குள் எப்போதும் வைத்திருக்க வேண்டும். உங்களுடைய வாராந்திர சட்ட ஒழுங்கு கூட்டத்தில் இதனை முக்கிய விவாதப் பொருளாகக் கொண்டு, விவாதிக்க வேண்டும். நல்லிணக்க கூட்டங்களை அவ்வப்போது நடத்த வேண்டும். சாதி எனும் கொடிய தீயினை தூண்டிவிட்டு, குளிர்காய நினைக்கும் சமூக விரோத கும்பல்களைக் கண்டறிந்து, வேற்றுமைகளைக் களைந்து, சமூக ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.

வழிப்பறிக் கொள்ளை, நகைப் பறிப்பு ஆகிய குற்றச் செயல்களை வளரவிடாமல் தடுப்பதற்கு காவல்துறையினர் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும். மக்கள் தெரிந்து கொள்ளக்கூடிய வகையில் கண்காணிப்புப் பணிகளை அதாவது எளைவீடெந யீடிடவீஉவீபேஐ, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டும். குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்கும், நடைபெறும் குற்றங்களில் குற்றவாளிகளைப் பிடிக்க விரைந்து செயல்படுவதற்கும் உதவும் வகையில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும், ஆங்காங்கே கண்காணிப்பு காமராக்களை நிறுவியும் பணியாற்றி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்.

முன்விரோதம் மற்றும் தொழில் தகராறு காரணமாக மர்ம நபர்களால் நடத்தப்படும் படு கொலை சம்பவங்களை ஒடுக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களிடையே தற்போது புதிதாக தலையெடுத்துள்ள கத்தி போன்ற ஆயுதங்களைப் பொது இடங்களில் பயன்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தும் கலாச்சாரத்தினை முற்றிலுமாக ஒழிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நகரங்களில், முக்கிய சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கு ஆங்காங்கே போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அப்பணியில் சிரத்தையுடன் ஈடுபடுவதை உறுதி செய்ய காவல் துறை உயர் அலுவலர்கள் அவ்வப்போது மேற்பார்வை செய்தல் அவசியம். மேலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியார் பங்களிப்புடன் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வேண்டும்.

சாலை விபத்துகள் தனி மனித வாழ்வில் பெரும் துயரத்தையும், பேரிழப்பையும் ஏற்படுத்துகின்றன. அவற்றைத் தடுக்க, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களை இனம் கண்டறிந்து, அவ்விடங்களில் சாலைகளை சீரமைத்தோ, தடுப்பு வேலிகள் அமைத்தோ, வாகனத்தின் வேகத்தைக் குறைக்கத் தேவையான எச்சரிக்கை பலகைகளை அமைத்தோ, மேலும் ஒரு விபத்து கூட அவ்விடத்தில் ஏற்படாமல் தடுக்க, முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். காவல்துறையின் ரோந்துப் பணிகளுக்காக அதிக அளவில் வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

கந்துவட்டி சம்பந்தமாக பெறப்படும் புகார்கள் மீது, தற்பொழுது அமலில் உள்ள தமிழ்நாடு அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம், 2003””ன்படி உரிய நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

ஒரு நம்பர் லாட்டரி, இணைய தளம் வாயிலாக நடைபெறும் சூதாட்டங்கள், குட்கா விற்பனை, போதைப்பொருட்கள் விற்பனை போன்றவை பொதுமக்களை, குறிப்பாக எதிர்கால சந்ததியினரைப் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்து இவற்றைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை தொடர வேண்டும். மேலும், இம்மாதிரியான குற்றங்கள் ஏதும் உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடப்பதாகத் தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களிலுள்ள காவலர்களை பொறுப்பாக்கி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார குற்றங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், சாதிய ஆணவக் கொலைகள் போன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இது சம்பந்தமாக வரும் புகார்கள் மீது, காலம் தாழ்த்தாமல் வழக்குகள் பதிவு செய்து, உரிய தொடர் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் நலனில் மாண்புமிகு அம்மாவின் அரசு எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. அவர்களின் மீதான வன் கொடுமை புகார்களைப் பதிவு செய்து, அச்சட்டத்தின்படி பாரபட்சமின்றி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்தியாவின் உள் மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பில் கடலோர பாதுகாப்பு முக்கிய பங்கெடுக்கின்றது என்றால் அது மிகையாகாது. கடலோரப் பாதுகாப்பு படை, கடலோர காவல் படை மற்றும் கடலோர கிராம வருவாய் நிர்வாகத்தின் கூட்டு முயற்சி, நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம் என்பதை மனதில் நிறுத்தி, கடலோர மாவட்டங்களில் பணி புரியும் அலுவலர்கள் இந்நேர்வில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

வெடிபொருட்களின் சட்ட விரோத பயன்பாடு சமூகத்தில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இம்மாதிரியான பொருட்களின் பயன்பாடுகளைக் கண்டறிந்து அவற்றை முழுவதுமாக கட்டுப்படுத்திட வேண்டும். வெடிபொருள் சேமிப்புக் கிடங்குகள் மற்றும் வெடிபொருள் தயாரிக்கும் இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடவடிக்கைகளின் மூலம் இதனை உறுதி செய்ய வேண்டும்.

கள்ளச்சாராய உற்பத்தி மற்றும் அதன் பயன்பாட்டினை தடுப்பதில் மாண்புமிகு அம்மாவின் அரசு உறுதியாக உள்ளது. எனவே, இவற்றினை முற்றிலுமாக களைய தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

திருக்கோயில்களில் நடைபெற்ற தீ விபத்து போன்ற நிகழ்வுகளினால் பொதுமக்களின் மனதில் எவ்வித ஐயப்பாடும் ஏற்படாவண்ணம் திருக்கோயில்களின் பாதுகாப்பில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும், தீயணைப்புத் துறையும், பொதுப்பணித்துறையும், இந்து சமய அறநிலையத் துறையும் இணைந்து பணியாற்றிட வேண்டும். சமீபத்தில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தினைப் போல், வேறு எங்கும் நிகழக் கூடாது என்பதை நினைவில் கொண்டு, சம்பந்தப்பட்ட அனைத்து துறையுடனும் நீங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இயற்கை இடர்பாடுகள் தவிர்க்கமுடியாமல் ஏற்படும்போது, அதன் தாக்கத்தினைக் குறைக்க தகுந்த முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை எப்போதும் தொய்வின்றி மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து, தமிழ்நாட்டு மக்களை கண்ணை இமை காப்பது போல் காத்து வருகிறது. மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்டு, பேரிடர் நேரங்களில் துரிதமாகச் செயல்பட்டு பொதுமக்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பொதுமக்கள் சிறிது சிறிதாக சேமித்த பணத்தை, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சில அவ்வப்போது முளைக்கின்றன. இதனைத் தடுக்கும் வகையில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். காவல் துறை குறும்படங்களை தயாரித்து அதனை மக்களிடம் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அலுவலர்களும் விழிப்புடன் செயல்பட்டு, சிறிது சந்தேகம் எழுந்தால் கூட, இத்தகு நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது துரிதமாக, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

குற்றம் செய்து தண்டனை பெற்றவர்கள், மீண்டும் குற்றம் செய்யாத அளவிற்கு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட இடம்தான் சிறைச்சாலை. ஆனால், சிறைச் சாலையினுள் மீண்டும் குற்றம் செய்ய தூண்டும் நடவடிக்கைகள் இருந்தால், சமூகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்படும். எனவே, சிறைச்சாலைகளில் கண்காணிப்பை மேலும் செம்மைப்படுத்தி, இம்மாதிரி செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சிறைத்துறை அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் பீடுநடை போடச் செய்ய வேண்டும் என்பதும், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க வேண்டும் என்பதும் தான் இந்த அரசினுடைய குறிக்கோள் என்ற மாண்புமிகு அம்மாவின் குறிக்கோளின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டு, சட்டம் ஒழுங்கு மற்றும் வளர்ச்சிப் பணிகள் மீது தங்களின் ஆக்கப்பூர்வமான விவாதங்களை எடுத்துரைத்து மாநிலத்தின் வளர்ச்சி பணிகளை மேம்படுத்த வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல்துறையில் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

131 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று (03.03.2018) தலைமைச் செயலகத்தில், காவல்துறை துணை தலைவராக பதவி உயர்வு பெற்ற திரு.ஏஜி.பாபு, இ.கா.ப., திருமதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami