தூத்துக்குடி கிரைம்ஸ் 10.9.2021

Prakash

கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட வழக்கின் பிரபல ரவுடி உட்பட 2 பேர் கைது.

கடந்த 14.08.2021 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகை அருகே வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்று கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்ட வழக்கில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துபாண்டி மகன் கணேசன் 28, ஆறுமுகம் மகன் சுடலைமுத்து 23, சேதுராமன் மகன் பேச்சிமுத்து 22. மற்றும் தோழப்பன்பண்ணையைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பேச்சிராஜா (எ) வெள்ளையன் 23 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேற்படி இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான கணேசன் மற்றும் சுடலைமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில் ராஜ் இ.ஆ.ப அவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர்களான முத்துபாண்டி மகன் 1) கணேசன் மற்றும் ஆறுமுகம் மகன் 2) சுடலைமுத்து ஆகிய இருவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. அன்னராஜ், மேற்படி குற்றவாளிகள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார்.


சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவுப்படி காவல் துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் நேற்று (08.09.2021) கோவில்பட்டி கிழக்கு, கயத்தார், புதூர், விளாத்திகுளம், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகிய 8 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 114 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சம்மந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது.

கோவில்பட்டி தாமஸ் நகர் என்ஜிஓ காலனியை சேர்ந்தவர் கணியப்பன் மகன் கிரகதுரை (62). இவர் 06.09.2021 அன்று தனது இரு சக்கர வாகனத்தை கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் வந்து பார்க்கும்போது இருசக்கர வாகனம் காணாமல் போயுள்ளது.

இதுகுறித்து கிரகதுரை நேற்று அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி ஆய்வாளர் திரு. காந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் நாகலாபுரம் அய்யம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி மகன் முனியசாமி 24 என்பவர் கிரகதுரையின் இரு சக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் முனியசாமியை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


வீட்டிற்குள் நுழைந்து நூதனமான முறையில் 10 பவுன் தங்க நகைகளை திருடிய பெண் கைது

தூத்துக்குடி அசோக்நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி சுப்புலட்சுமி 60 என்பவர் வீட்டில் தனியாக இருந்தபோது கடந்த 01.09.2021 அன்று அவரது வீட்டிற்கு வந்த பெண் ஒருவர் தான் தொழிலாளர் நல வாரியத்திலிருந்து வருவதாகவும், முதியோர் ஓய்வுதியம் பெற்று தருவதாக கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டு, சுப்புலட்சுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவரிடம் பேசி கொண்டிருந்துள்ளார்.

அப்போது சுப்புலட்சுமி மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்து பாரக்கும் போது தான் அணிந்திருந்த கம்மல், செயின் மற்றும் மோதிரம் என 10 பவுன் தங்க நகைகளை அந்த மர்ம பெண் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சுப்புலட்சுமி அளித்த புகாரின்பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள், தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ராமகிருஷ்ணன், முதல் நிலை பெண் காவலர் திருமதி. சுந்தரி மற்றும் காவலர் திருமதி. சுகன்யா உட்பட போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்யுமாற உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி பாப்பாத்தி (எ) லதா 56 என்பவர் மேற்படி சுப்புலட்சுமியிடம் நூதன முறையில் நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து மேற்படி போலீசார் நேற்று (08.09.2021) மேற்படி குற்றவாளியான பாப்பாத்தி (எ) லதாவை தாழையூத்து பகுதியில் வைத்து கைது செய்தனர். இது குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி நகைகளை திருடிய பெண்ணை கைது செய்த சிப்காட் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.


வேனும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சில்லாநத்தம் அருகே இன்று (09.09.2021) காலை சுமார் 6 மணி அளவில் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து வேலைக்கு ஆட்களை ஏற்றி வந்த வேனும், தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் நோக்கி சென்ற தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் வேனில் பயணம் செய்த சில்லாநத்தம் பகுதியை சேர்ந்துவர்களான கணேசன் மனைவி செல்வராணி 45, ரவீந்திரன் மனைவி காமாட்சி (எ) ஜோதி 40, முப்பிலிவெட்டி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி சந்தியா 48 மற்றும் நடுவக்குறிச்சி காலனியை சேர்ந்த அடைக்கலாஜ் மகள் மணிமேகலை 20 ஆகிய 4 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை மீட்டு தூத்துகுடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். காயம்பட்டவர்கள் 10 பேரையும் காப்பாற்றி அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டும் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

அவருடன் தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பொன்னரசு, புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு. ரமேஷ், புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பாலன், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. நம்பிராஜன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார், தண்ணீர் லாரியை அஜாக்கிரதையாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய மேற்படி தண்ணீர் லாரி ஓட்டுனரான புதியம்புத்தூர் நயினார்புரம் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் பண்டாரம் 41 என்பவர் மீது வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுபாட்டில்கள் பறிமுதல் இருவர் கைது

330  திருவாரூர்: கோம்பை காவல் நிலைய எல்லைபகுதியில், எஸ்.ஐ. திரு.ஜெகநாதன் தலைமையில் போலீஸார் ரோந்து சென்றனர். மதுபானங்கள் போலீஸார் கண்காணிப்பை மீறி விற்கப்படுவதாக கிடைத்த தகவல் அடுத்து, […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452